திணறுது மூச்சு... தொடர் விடுமுறை எதிரொலி - உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!
காந்தி ஜெயந்தி, வார இறுதி நாள்கள் மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டுத் தலைநகர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை திடீரெனப் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதனால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முக்கியச் சுங்கச்சாவடிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஒரே நேரத்தில் குவிந்துள்ளதால், வாகனங்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.
இன்று அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தைத் தொடர்ந்து வரும் நாட்களில் வார இறுதி விடுமுறையும் இணைந்து வருவதால், தமிழகத்தில் மூன்று நாள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. சென்னையில் தங்கிப் பணிபுரியும் ஐடி ஊழியர்கள், தனியார் மற்றும் அரசுத் துறை ஊழியர்கள், கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லத் திட்டமிட்டனர்.
இதன் காரணமாக, நேற்று மாலை துவங்கி இன்று காலை முதல் சென்னை மாநகரத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினர். ஆம்னி பேருந்துகள், அரசுப் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் மக்கள் குடும்பத்துடன் ஊர் திரும்பியதால் நகரின் முக்கிய வெளியேறும் சாலைகளில் கடும் நெரிசல் காணப்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இருந்து திருச்சி, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு தென் மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியைக் கடந்தே செல்ல வேண்டும். ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான தனியார் கார்கள் மற்றும் பேருந்துகள் குவிந்ததன் காரணமாக அங்கு கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.
சுங்கக் கட்டணம் செலுத்திவிட்டுச் செல்வதற்காக வாகனங்கள் வரிசையாக நின்றதால், சுங்கச்சாவடியைக் கடப்பதில் பெரும் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாகச் சுங்கச்சாவடிக்கு முன்பாகச் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சுங்கக்கட்டணம் செலுத்தும் பாதைகளில் ஏற்பட்ட அதிகப்படியான வாகன அழுத்தம் காரணமாக, வாகனங்கள் அனைத்தும் ஊர்ந்து செல்லும் நிலையே காணப்பட்டது.
குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொண்ட பொதுமக்கள் மற்றும் குழந்தைகள், முதியவர்கள் இந்தச் சுங்கச்சாவடி நெரிசலில் சிக்கி பல மணி நேரம் கடும் அவதிக்குள்ளாகினர்.
வாகன நெரிசலைக் கட்டுப்படுத்தவும், விரைவாக வாகனங்களை அனுப்பி வைக்கவும் சுங்கச்சாவடி நிர்வாகத்தினரும், காவல்துறையினரும் இணைந்து தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அவசர காலப் பாதைகளையும் திறந்துவிட்டு வாகனங்களை விரைவாக அனுப்பும் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், விடுமுறை நாள்களின் முதல் நாளிலேயே நெடுஞ்சாலைகளில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் நெரிசல் பொதுமக்களிடையே பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. தென் மாவட்டங்களை நோக்கிச் செல்லும் பயணிகள் தங்களது பயண நேரத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.