BRICS Summit 2026:  பயங்கரவாதம் முதல் வர்த்தகம் வரை... அமெரிக்காவுக்கு வைத்த செக்... முக்கிய முடிவுகள்! 

 

 

இந்தியா தலைமையில் நடைபெற்ற 18-வது BRICS உச்சி மாநாட்டின் முடிவில் ‘புதிய டெல்லி பிரகடனம்’ வெளியிடப்பட்டது. இதில் பயங்கரவாதம், வர்த்தகம், மேற்கு ஆசிய மோதல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் உறுப்பு நாடுகள் தங்களது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளன.ஒருதலைப்பட்சமாக விதிக்கப்படும் வர்த்தக வரிகளுக்கு BRICS நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு நியாயமான வர்த்தகம் நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிராகவும் BRICS நாடுகள் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் நிராகரிப்பதாக தெரிவித்துள்ள நாடுகள், கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவித்துள்ளன. பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பான இடங்கள் வழங்கப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் மற்றும் பதற்றம் குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதல்களுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக ரீதியான தீர்வு காணப்பட வேண்டும் என்றும், காசாவில் மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும் என்றும் BRICS வலியுறுத்தியுள்ளது.

பொருளாதார ரீதியாக, BRICS நாடுகளுக்கு இடையே உள்ளூர் நாணயங்களில் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், உடனடியாக தனி BRICS நாணயம் உருவாக்கும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.செயற்கை நுண்ணறிவு துறையிலும் உறுப்பு நாடுகள் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளன. பாதுகாப்பான, நம்பகமான மற்றும் அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் AI தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதவிர, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, சுகாதாரம், தொழில்துறை வளர்ச்சி உள்ளிட்ட துறைகளிலும் BRICS நாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிக்க புதிய முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.