டெல்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு: உச்சக்கட்ட பாதுகாப்புடன் செப்.12, 13-ல் நடைபெறுகிறது!
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய 'பிரிக்ஸ்' அமைப்பின் 18-வது உச்சி மாநாடு புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு கோலாகலமாக நடைபெறுகிறது.
இந்தியா நான்காவது முறையாக இந்த உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கி நடத்துவது குறிப்பிடத்தக்கது. மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் உள்ளிட்ட முக்கிய உலகத் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டையொட்டி டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், டெல்லி மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்புைக் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது, பொதுவான முன்னுரிமைகள் மற்றும் உலகளாவிய மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து தலைவர்கள் தங்களது கருத்துகளைப் பரிமாறிக்கொண்டு விவாதிக்க உள்ளனர்.