திருமணமான 9 நாட்களில் மனைவியை மாமனார் வீட்டில் விட்டுவிட்டு காதலியுடன் ஓடிய புதுமாப்பிள்ளை!

 

தேனி அருகே பெற்றோர் வற்புறுத்தலால் விருப்பமில்லாமல் திருமணம் செய்து கொண்ட புதுமாப்பிள்ளை, திருமணமான ஒன்பதே நாட்களில் மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, தனது காதலியுடன் திருப்பூருக்கு ஓடிவிட்ட வினோத சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, அவரது பெற்றோரின் கட்டாயத்தின் பேரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் பார்த்து நிச்சயித்த இளம்பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்தத் திருமணத்தில் அந்த வாலிபருக்குச் சற்றும் விருப்பமில்லை என்று கூறப்படுகிறது.

திருமணம் முடிந்து 9 நாட்களே ஆன நிலையில், அந்த வாலிபர் தனது மனைவியை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டு போய் விட்டுள்ளார். அதன் பிறகு நீண்ட நேரமாகியும் கணவர் திரும்ப வராததாலும், அவரது செல்போன் எண் அணைத்து வைக்கப்பட்டிருந்ததாலும் அதிர்ச்சியடைந்த புதுப்பெண், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இளம்பெண் அளித்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். வாலிபரின் மொபைல் எண் மற்றும் நண்பர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அந்த வாலிபர் திருமணத்திற்கு முன்பே ஒரு பெண்ணைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் ஏற்கனவே தனது கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். பெற்றோர் கட்டாயத்தால் வேறு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டாலும், அந்த வாலிபரால் தனது காதலியை மறக்க முடியவில்லை. இதனால் திட்டமிட்டு மனைவியை மாமனார் வீட்டில் இறக்கிவிட்டு, நேராகக் காதலியைத் தூக்கிக் கொண்டு திருப்பூருக்கு ஓட்டம் பிடித்து அங்கு தஞ்சமடைந்தது தெரியவந்தது.

தற்போது திருப்பூரில் பதுங்கியிருக்கும் புதுமாப்பிள்ளை மற்றும் அவரது காதலியைத் தேடிப் பிடிப்பதற்காகத் தேனி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தேனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.