வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இரும்புப் பாலம்...ஓட்டுநர் மாயமானதால்   அதிர்ச்சி!

 

உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தின் நிதி பள்ளத்தாக்கு பகுதியில் பெய்துவரும் தொடர் கனமழையால் டமாக் ஓடையில் திடீரெனப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் இருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ளநீரின் வேகத்தைத் தாக்குப்பிடிக்க முடியாமல் எல்லைச் சாலைகள் அமைப்புக்குச் சொந்தமான இரும்புப் பாலம் நொடிப்பொழுதில் அடித்துச் செல்லப்பட்டது. இந்த இயற்கை இடர்பாட்டால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

ஆபத்தான முறையில் பாலம் அடித்துச் செல்லப்பட்ட அந்தச் சமயத்தில் அருகில் நின்றிருந்த எல்லைச் சாலை அமைப்பின் வாகனமும் ஓட்டுநரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். ஆற்றின் கடுமையான நீரோட்டம் காரணமாக உடனடியாக யாரையும் அருகில் நெருங்க முடியவில்லை என்பதால் மீட்புப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் பேரிடர் மீட்புக்குழுவினர் மாயமான ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்துவரும் மழையால் மீட்புப் பணிகளில் கடுமையான தடைகள் ஏற்பட்டுள்ள போதிலும் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணிகளும் முடக்கி விடப்பட்டுள்ளன.