தாய், தங்கையைக் கொன்று சகோதரனும் தற்கொலை... ஜெய்ப்பூரில் சோகம்!

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ராம்நகர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாயையும் சகோதரியையும் கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெய்ப்பூர் ராம்நகர் பகுதியில் வசித்து வந்த சரோஜ் தேவி (50), அவரது மகள் ஷிவாங்கி (25) மற்றும் மகன் லக்கி (27) ஆகிய மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் கடந்த வியாழக்கிழமை நடந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தாயையும் சகோதரியையும் கொலை செய்த பின்னர் லக்கி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனக் காவல்துறை சந்தேகிக்கிறது.

லக்கியின் செல்போனில் தற்கொலைக் குறிப்பு போன்ற கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பட்டா பஸ்தி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, சம்பவத்திற்கான காரணம் குறித்துத் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.