பயங்கரம்... தாய் மற்றும் அண்ணனை கொலை செய்து வீட்டின் பின்புறம் புதைத்த தம்பி!

 

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டம் பகுதியில், தாயையும் அண்ணனையும் கொலை செய்து வீட்டின் பின்புறமே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெடுங்கண்டத்தைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி மேரிக்குட்டி மற்றும் அவரது மூத்த மகன் ரெஜி (54) ஆகிய இருவரையும் கடந்த ஒரு மாதமாக காணவில்லை. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் இளைய மகன் சஜியிடம் விசாரித்தபோது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் வலுத்தது.

இதனையடுத்து மேரிக்குட்டியின் மகள் சினி அளித்த புகாரின் பேரில், நெடுங்கண்டம் போலீசார் சஜியின் வீட்டுக்குச் சென்று சோதனை நடத்தினர். போலீசாரின் வருகையை அறிந்த சஜி தலைமறைவானார். தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையில், வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட நிலையில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. உடல்கள் புதைக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டதால் அவை மிகவும் அழுகிய நிலையில் இருந்தன.

மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குடும்பத் தகராறு காரணமாக சஜி இந்த விபரீத கொலையைச் செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவாக உள்ள சஜியைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.