ஒரு பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளும் சகோதரர்கள் - சொத்து பிரியாமல் இருக்க ‘ஹட்டி’ பழங்குடியினரின் வினோத பழக்கம்!

 

நவீன உலகில் திருமண முறைகள் பல மாற்றங்களைச் சந்தித்து வரும் நிலையிலும், இமாச்சலப் பிரதேசத்தின் டிரான்ஸ்கிரி (Trans-Giri) பகுதியில் வாழும் 'ஹட்டி' (Hatti) பழங்குடியின மக்கள், தங்களது முன்னோர்களின் வினோதமான திருமண முறையை இன்றும் கடைப்பிடித்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள ஒரு குடும்பத்தில், மூத்த மகன் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டால், அந்தப் பெண் முறைப்படி அந்த வீட்டில் உள்ள மற்ற அனைத்துச் சகோதரர்களுக்கும் மனைவியாகக் கருதப்படுவார். இதனை 'திரௌபதி மணம்' என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர்.

இந்த வழக்கத்திற்குப் பின்னால் சில வலுவான சமூக மற்றும் பொருளாதாரக் காரணங்கள் இருப்பதாக அந்த மக்கள் கூறுகின்றனர். ஒரு வீட்டில் உள்ள நான்கு சகோதரர்களும் தனித்தனியாகத் திருமணம் செய்து கொண்டால், குடும்பச் சொத்துக்கள் நான்காகப் பிரியும். ஆனால், அனைவரும் ஒரே பெண்ணை மணக்கும்போது, நிலமும் சொத்துக்களும் பிரியாமல் ஒன்றாகவே இருக்கும்.

மலைப்பாங்கான பகுதிகளில் வாழ்வாதாரம் கடினம் என்பதால், குடும்பப் பொருளாதாரத்தைச் சீராக வைக்க இது ஒரு வழியாகப் பார்க்கப்படுகிறது. இந்த முறையின் மூலம் ஒரு குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை ஓரளவுக் கட்டுப்படுத்தப்படுவதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

இருப்பினும், தற்போதைய இளைய தலைமுறையினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு நிமித்தமாக வெளியூர்களுக்குச் செல்வதால், இந்த வழக்கம் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது. பல ஹட்டி இளைஞர்கள் இப்போது தனித்தனித் திருமண முறைகளையே விரும்பத் தொடங்கியுள்ளனர். ஆனாலும், பழமை மாறாத சில குக்கிராமங்களில் இன்றும் இந்த 'கூட்டுத் திருமண முறை' ஒரு கலாச்சார அடையாளமாக நீடிக்கிறது.