தமிழ்நாட்டின் கடன் சுமை ரூ.10 லட்சம் கோடி... நிதியமைச்சர் மரிய வில்சன் !
தமிழ்நாட்டின் மொத்தக் கடன் சுமை தற்போது ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மாநில நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தவெக அரசின் முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து உரையாற்றிய அவர், கடந்த 5 ஆண்டுகளில் அரசின் கடன் அளவு இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக அரசு செலுத்தி வரும் வட்டியின் அளவும் ஆண்டுதோறும் தொடர்ச்சியாக உயர்ந்து வருவதாக அவர் கவலைத் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வரும் 2036ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் தனது உரையில் குறிப்பிட்டார். இருப்பினும் அதிகரித்து வரும் கடன் சுமையைக் கட்டுப்படுத்தவும், அரசின் நிதி நிலையைச் சீர்படுத்தவும் பல்வேறு புதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். அரசு மேற்கொண்டு வரும் அனைத்து ஒப்பந்தங்களிலும் முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
நிதி மேலாண்மையைச் சீரமைப்பதற்கான பல்வேறு திட்டங்களை இந்த பட்ஜெட் மூலம் அரசு செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நிதியமைச்சரின் இந்த அதிரடியான அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசின் புதிய நிதி நிலை அறிக்கை குறித்த விபரங்களை மக்கள் அனைவரும் மிகுந்த கவனத்துடன் கவனித்து வருகின்றனர்.