"ஆட்ட நாயகன் விருதை பும்ராவுக்கு வழங்கியிருக்க வேண்டும்" - சஞ்சு சாம்சனின் நெகிழ்ச்சியான பேச்சு!
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான அரையிறுதிப் போட்டியில், இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் (8 பவுண்டரி, 7 சிக்சர்) விளாசி இந்திய அணி 253 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட உதவினார். 254 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் சதமடித்து மிரட்டினார். ஒருகட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெறும் நிலையில் இருந்தபோது, பும்ரா தனது துல்லியமான பந்துவீச்சால் (18-வது ஓவரில் வெறும் 6 ரன்கள்) ஆட்டத்தை இந்தியாவின் பக்கம் திருப்பினார். பும்ரா 4 ஓவர்களில் 33 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். போட்டிக்குப் பிறகு ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற சஞ்சு சாம்சன், மேடையிலேயே தனது பெருந்தன்மையைக் காட்டினார்.
"இந்த விருது உண்மையில் ஜஸ்பிரித் பும்ராவுக்குத்தான் சேர வேண்டும். அவர் ஒரு 'தலைமுறைக்கு ஒருமுறை' பிறக்கும் அபாரமான பந்துவீச்சாளர். இக்கட்டான கடைசி ஓவர்களில் அவர் வீசிய அந்தப் பந்துவீச்சு இல்லை என்றால், நான் இன்று இந்த இடத்தில் நின்று கொண்டிருக்க மாட்டேன். இந்தப் போட்டியின் வெற்றியில் அவரது பங்கு மிகப்பெரியது."
இங்கிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்தியா இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து அணியுடன் இந்தியா இறுதிப்போட்டியில் மோதவுள்ளது. சாம்சன் தனது பேச்சில் அக்சர் படேலின் சிறப்பான கேட்ச்கள் மற்றும் ஒட்டுமொத்த அணியின் கூட்டு உழைப்பையே இந்த வெற்றிக்குக் காரணம் என்றும் புகழ்ந்து பேசினார்.