undefined

பற்றி எரியும் மத்திய கிழக்கு..  இஸ்ரேல் - அமெரிக்கா கூட்டுத் தாக்குதலும், ஈரானின் பதிலடியும்!

 

இன்று மத்திய கிழக்குப் பகுதியில் நிகழ்ந்துள்ள போர்ச் சூழல் உலக நாடுகளைப் பதற்றமடைய செய்துள்ளன.  மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக நிலவி வந்த பதற்றம் இன்று ஒரு முழு அளவிலான போராக மாறியுள்ளது. ஈரான் அணு ஆயுதத்தைப் பெறுவது தங்களுக்கு அச்சுறுத்தல் எனக் கருதி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து இன்று அதிகாலை முதல் ஈரான் மீது மிகப்பெரிய வான்வழித் தாக்குதலைத் தொடங்கியுள்ளன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆகியோரின் உத்தரவின் பேரில், 'ஆபரேஷன் எபிக் பியூரி' (Operation Epic Fury) என்ற பெயரில் இந்தத் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈரானின் அணுசக்தி மையங்கள், ராணுவத் தளங்கள் மற்றும் தலைநகர் தெஹ்ரானின் முக்கியப் பகுதிகள் என 30-க்கும் மேற்பட்ட இடங்களை இலக்காகக் கொண்டு ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.

தங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் தனது 'புரட்சிகர காவல்படை' மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி வருகிறது. ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை நோக்கிப் பல நூறு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றை இடைமறித்து அழித்து வருகிறது.

தலைநகர் ரியாத் மற்றும் சில முக்கிய ராணுவத் தளங்களுக்கு அருகே வெடிச்சத்தங்கள் கேட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அபுதாபிக்கு அருகே உள்ள அல்-தாஃப்ரா அமெரிக்க விமானப்படைத் தளம் குறிவைக்கப்பட்டது. ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில் அபுதாபியில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பஹ்ரைன் பகுதியில் உள்ள அமெரிக்காவின் 5-ஆவது கடற்படைத் தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை பஹ்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. கத்தாரில் உள்ள அல்-உடைத் தளம் மற்றும் குவைத்தில் உள்ள அலி அல்-சலேம் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.

பதற்றம் காரணமாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தங்களது வான்வெளியைத் தற்காலிகமாக மூடியுள்ளன. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரானில் உள்ள ஒரு பெண்கள் பள்ளியின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் வரை உயிரிழந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த யுத்தவெறிச் செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளன.

வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் இருக்கவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள இந்தப் போர்ச் சூழல் உலகப் பொருளாதாரத்திலும், கச்சா எண்ணெய் விலையிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.