கோர விபத்து... கார் , ஆம்னி பேருந்து  மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி!

 

 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா கோட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பாண்டியன், கவுசல்யா, வளர்மதி, தில்லையம்மாள், கோகுலவாணி, மணிசர்மா, திருநாவுக்கரசு, தனலட்சுமி, இவரது மகன் பவீன் ஆகியோர் காரில் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்குச் சென்றுள்ளனர். கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டுச் சமயபுரம் கோயிலுக்குச் செல்வதற்காக அவர்கள் அனைவரும் டிரைவர் மகேஸ்வரன் ஓட்டிச் சென்ற காரில் இரவு புறப்பட்டனர். பயணம் முழுவதும் மகிழ்ச்சியாக இருந்த அந்த குடும்பத்தினர் வழியில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தால் கண் இமைக்கும் நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நேற்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் கட் ரோட்டைக் கடந்து பள்ளிவிடை பாலம் அருகே சர்வீஸ் சாலையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் கார் சென்றுள்ளது. இதனால் டிரைவர் மகேஸ்வரன் திடீரெனப் பிரேக் பிடித்துக் காரை நிறுத்திப் பின்னோக்கி ஓட்டி வந்தபோது திருச்சியில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பஸ் மோதியது. பஸ் மோதியதில் காரின் பின் பகுதி முற்றிலும் நொறுங்கியதுடன் பாண்டியன், தனலட்சுமி, அவரது மகன் பவீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த கோர விபத்தில் மற்ற 7 பேரும் படுகாயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் பஸ் டிரைவரான ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த அஜித் குமாரைக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.