மலைப்பாதையில் தலைகீழாகக் கவிழ்ந்த பேருந்து... 7 பேர் உடல் நசுங்கி பலி.. 11 பேர் கவலைக்கிடம்!
இமாச்சலப் பிரதேசத்தின் சம்பா மாவட்டத்தில் உள்ள கடினமான மலைப்பாதையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. பைராகர் பகுதியில் இருந்து சம்பா நோக்கிப் பயணித்த அந்தப் பேருந்து, சலுஞ்ச் வளைவுப் பகுதியில் திரும்பியபோது நிலை தடுமாறிப் பலமுறை தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்து சாலையிலிருந்து தாழ்வான பகுதிக்கு உருண்டு விழுந்ததால் அதிலிருந்த பயணிகள் அனைவரும் நசுங்கிப் பரிதாபமாகத் துடிதுடித்தனர்.
#WATCH | Reportedly 7 killed, 11 injured after private bus skids off road and crashes near Chalunj Mor in Himachal Pradesh’s Chamba District.
— ANI (@ANI) August 8, 2026
Visuals of the police team present at the spot. The extent of the damage to the vehicle shows the severity of the accident. pic.twitter.com/PmUxCsB5AB
இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி மக்கள் உடனடியாக ஓடிவந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் இணைந்து மீட்புப் பணிகளை முழுவீச்சில் மேற்கொண்டனர். இந்த கோர விபத்தில் ஓட்டுநர் உள்பட 7 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த 11 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மீட்கப்பட்டவர்களில் சிலரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. மலைப்பாங்கான குறுகிய சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலைவர்கள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர்.