நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த பேருந்து.. நூலிழையில் உயிர்தப்பிய 40 மாணவர்கள்.. கொடைக்கானல் சுற்றுலாவில் விபரீதம்!
கொடைக்கானல் சுற்றுலா முடித்துத் திரும்பிய போது, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஓடும் சுற்றுலா பேருந்தில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஓட்டுநரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் 40-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர்.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் குழுவினர் சுற்றுலாப் பேருந்தில் கொடைக்கானலுக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தனர். தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, வாகனத்தின் பின் பகுதியில் திடீரெனப் புகை வெளியேறித் தீப் பற்றி எரியத் தொடங்கியது.
இதைக் கண்ட பேருந்து ஓட்டுநர் உடனடியாகச் சாமர்த்தியமாக வாகனத்தைச் சாலையோரம் நிறுத்தி, பேருந்தில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை விரைவாகக் கீழே இறக்கினார். மாணவர்கள் அனைவரும் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே, தீ பேருந்து முழுவதும் வேகமாகப் பரவி குபுகுபுவெனப் பற்றி எரிந்தது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும், பெரியகுளம் மற்றும் தேனியில் இருந்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் சுமார் அரை மணி நேரம் கடுமையாகப் போராடித் தீயை முழுமையாக அணைத்தனர். இருப்பினும், பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் டயர் வெடித்த உராய்வு காரணமாகவோ அல்லது ஏசி சிஸ்டத்தின் சிலிண்டர் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவோ இந்தத் தீ விபத்து நேரிட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு வந்த தேவதானப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பாக மீட்கப்பட்ட கேரள மாணவர்கள் அனைவரும் தங்களது ஊருக்குத் திரும்புவதற்காக உடனடியாக மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.