தலைக்குப்புற கவிழ்ந்த பேருந்து... ஈரானில் கோர விபத்து - 11 பேர் பலி; 24 பேர் படுகாயம்!
ஈரானில் மத்திய மார்க்காஜி மாகாணத்தில் நிகழ்ந்த பயங்கர பேருந்து விபத்தில் 11 பேர் உயிரிழந்ததுடன், 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஈரானின் மத்திய மார்க்காஜி மாகாணத்தில் உள்ள சவே-ஹமீதன் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 24 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டுநருக்கு ஏற்பட்ட கடுமையான சோர்வு மற்றும் தூக்கக் கலக்கமே விபத்திற்குக் காரணம் என்று போக்குவரத்து காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர். மேலும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றாதது மற்றும் அவசரகால சேவைகளின் பற்றாக்குறை காரணமாக ஈரானில் ஆண்டுதோறும் சுமார் 17,000 பேர் இது போன்ற விபத்துகளில் உயிரிழந்து வருவதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.