ஓசூர் - பெங்களூரு இடையே பேருந்து சேவை மீண்டும் துவங்கியது -  எல்லைப் பகுதியில் பதற்றம் தணிந்தது!

 

மேகதாது அணைக் கட்டும் விவகாரம் தொடர்பாகக் கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தத் திட்டமிட்டதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாகத் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ஓசூர் - பெங்களூரு இடையேயான பேருந்து சேவைகள் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளன.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முனையும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்குத் தமிழக அரசு மற்றும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து தீவிர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாகக் காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராகக் கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த முற்பட்டன.

பாதுகாப்பு காரண கருதி, தமிழ்நாட்டிலிருந்து கர்நாடகா நோக்கிய தமிழக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஓசூர் எல்லைப் பகுதியிலேயே முன்னெச்சரிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதேவேளையில், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாடு நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்துகள் வழக்கம் போலத் தொடர்ந்து இயங்கின.

சில மணி நேரத் தற்காலிக நிறுத்தத்திற்குப் பிறகு, நிலைமை சீரானதைத் தொடர்ந்து ஓசூர் மற்றும் பெங்களூரு இடையேயான அனைத்துப் பேருந்து சேவைகளும் மீண்டும் தொடங்கிப் பொதுமக்கள் தங்களது பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.