undefined

மழைநீர் தேங்கிய சுரங்கப் பாதைகளில் பேருந்துகள் இயக்க தடை ...! 

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், மழைநீர் தேங்கியுள்ள சுரங்கப் பாதைகள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் பேருந்துகளை இயக்கக் கூடாது என ஓட்டுநர்களுக்கு போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியதிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருவதோடு, மோந்தா புயல் தாக்கம் காரணமாக வட தமிழக மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை நீடித்தது. அடுத்த இரண்டு மாதங்களில் மழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு உள்ளதால், பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் அவசியமான பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என துறை வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கையில், சுரங்கப்பாதைகள் மற்றும் மேம்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பேருந்துகளை மாற்று வழிகளில் இயக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. காடாற்று ஓரங்களில் பேருந்துகளை இயக்கும்போது வெள்ளத்தின் ஆழத்தை சரிபார்த்து கவனமாக இயக்க வேண்டும் என்றும், தண்ணீர் குறைவாக இருப்பதாக பயணிகள் கூறினாலும் மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பணிமனைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால்கள் சரியாக உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பேருந்துகளில் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால் உடனடியாக கிளை மேலாளர்களுக்கு தகவல் அளிக்க வேண்டும். சாலைகளில் மின்கம்பிகள் அல்லது மரங்கள் விழுந்துள்ளனவா என கண்காணித்து பாதுகாப்புடன் இயக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. பணிமனைகளில் உள்ள டீசல் பங்குகளில் தண்ணீர் கலக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், இணைய வழியில் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பேருந்து புறப்படும் நேரம் குறித்து குறுஞ்செய்தி மூலம் முன்கூட்டியே தகவல் அனுப்ப வேண்டும் என்றும் சுற்றறிக்கை கூறுகிறது.