"பொதுமக்களுக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை"...  த.வெ.க.வினருக்குப் புஸ்ஸி ஆனந்த் கடும் எச்சரிக்கை!

 

 

 

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் மிக முக்கியமான அறிவுறுத்தல் ஒன்றை இன்று விடுத்துள்ளார். கட்சியின் பெயரிலோ அல்லது நிகழ்ச்சிகளின் போதோ பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதில் முதலமைச்சர் ஜோசப் விஜய் மிக உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, சாலைகளில் பேனர்கள் வைப்பது மற்றும் வாகனப் பேரணிகளின் போது போக்குவரத்து விதிகளுக்குப் புறம்பாகச் செயல்படுவதைத் தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

கட்சி விதிகளுக்கு முரணாகச் செயல்படும் நபர்கள் மீது தயவுதாட்சண்யமின்றி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் புஸ்ஸி ஆனந்த் எச்சரித்துள்ளார். "மக்களுக்கான இயக்கமாகத் தொடங்கப்பட்ட நமது கழகம், அவர்களுக்கு ஒருபோதும் தொந்தரவாக இருக்கக்கூடாது. பொதுமக்களின் பாராட்டுதலைப் பெறும் வகையில் நமது செயல்பாடுகள் அமைய வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். விதிமீறல்களில் ஈடுபடும் நிர்வாகிகள் தங்களது பொறுப்புகளில் இருந்து உடனடியாக நீக்கப்படுவார்கள் என்றும் அவர் அந்த எச்சரிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் விஜய்யின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமை கழகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட நிர்வாகிகள் தங்கள் பகுதி தொண்டர்களை முறைப்படுத்தி, மக்கள் நலப்பணிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒழுக்கமும் கட்டுப்பாடும் தான் ஒரு பேரியக்கத்தின் பலம் என்பதை உணர்ந்து அனைவரும் செயல்பட வேண்டும் எனப் புஸ்ஸி ஆனந்த் அந்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.