செப்.30க்குள் கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கனிம வளங்களைக் கடத்துவதைத் தடுத்தல் மற்றும் அரசுக்கு உரிய வருவாயைப் பெருக்குதல் போன்ற நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சென்னை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநரகத்தில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு தலைமையில் துறை சார்ந்த பணிகள் மற்றும் மாவட்ட அலுவலர்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
சட்டவிரோத குவாரிகளைத் தடுத்தல் மற்றும் அனுமதியின்றி கனிமங்களைக் கொண்டு செல்வதை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கில், கனிமங்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் வருகின்ற செப்.30ம் தேதிக்குள் ஜி.பி.எஸ். கருவி கட்டாயமாகப் பொருத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள குத்தகை விண்ணப்பங்கள் மீதான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறும், புதிய பகுதிகளை மின்னணு முறையில் ஏலத்திற்கு விடுமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அரசின் வருவாயை அதிகரிக்க நிர்ணயிக்கப்பட்ட கனிம உற்பத்தி இலக்குகளை முழுமையாக எய்திட அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
தேசிய நெடுஞ்சாலை மற்றும் இதர சாலைப் பணிகளுக்கு மண் எடுக்க அனுமதி கோரும் ஒப்பந்ததாரர்களுடன் சிறப்புப்ட்டுக் கூட்டம் நடத்தப்பட்டு, குத்தகை அனுமதி பெறுவதில் உள்ள சிரமங்களைக் கேட்டறிந்து அவற்றைச் களைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் அரசு முதன்மை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் த.பிரபுசங்கர் உள்ளிட்ட உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.