5 தொகுதி இடைத்தேர்தல்: தீவிரம் காட்டும் தவெக, திமுக; பின்வாங்கும் அதிமுக!
தமிழகத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, காலியாக உள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இத்தேர்தலில் தற்போதைய ஆளுங்கட்சியான தவெகவும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவும் களம் காணத் தீவிரமாகத் தயாராகி வரும் வேளையில், உட்கட்சிப் பூசல்களால் தவிக்கும் அதிமுக இத்தேர்தலில் இருந்து பின்வாங்க ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் அண்மையில் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்த 4 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்ததாலும், முதலமைச்சர் விஜய் ஒரு தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டதாலும்
திருச்சி கிழக்கு (முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதியை வைத்துக் கொண்டதால் இத்தொகுதி காலியானது), அம்பாசமுத்திரம் (இசக்கி சுப்பையா ராஜினாமா), மதுராந்தகம் - தனி (மரகதம் குமரவேல் ராஜினாமா), பெருந்துறை (ஜெயக்குமார் ராஜினாமா),தாராபுரம் - தனி (சத்யபாமா ராஜினாமா) என இந்த 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, தமிழக வெற்றிக் கழகத்திற்குச் சட்டமன்றத்தில் 107 எம்.எல்.ஏ-க்கள் பலம் உள்ளது. இந்த 5 இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், தவெக-வின் பலம் 112 ஆக உயரும். தவெக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக), கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கூட்டணிக் கட்சிகளின் தடையற்ற ஆதரவு உள்ளதால், 5 ஆண்டுகால முழு ஆட்சியை எவ்விதச் சிக்கலுமின்றித் தக்க வைத்துக் கொள்ள முடியும் என தவெக தலைமை நம்புகிறது. எனவே, இந்த 5 தொகுதிகளையும் கைப்பற்ற அக்கட்சி தீவிரப் பணிகளில் இறங்கியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியை அடுத்தகட்ட நகர்வுக்குக் கொண்டு செல்ல இந்த இடைத்தேர்தல் களம் தங்களுக்கு ஒரு முக்கிய வாய்ப்பு என்று திமுக கருதுகிறது. இழந்த தங்களது அரசியல் செல்வாக்கை மீட்டெடுக்கவும், தங்களது உண்மையான பலத்தை நிரூபிக்கவும் இந்த 5 தொகுதிகளிலும் தங்களது சொந்த வேட்பாளர்களை நிறுத்த திமுக தலைமை முடிவு செய்துள்ளது. இதற்காக, மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகளிடம் திமுக தலைமை தற்போது தீவிர கருத்துக்கணிப்புகளையும், ஆலோசனைகளையும் முன்னெடுத்து வருகிறது.
அதிமுகவைப் பொறுத்தவரையில், சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு கட்சிக்குள்ளே நீறுபூத்த நெருப்பாக உட்கட்சிப் பூசல்கள் நீடித்து வருகின்றன. அதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த முக்கிய எம்.எல்.ஏ-க்கள் 4 பேர் தங்களது பதவிகளைத் துறந்து தவெக பக்கம் சென்ற அதிர்ச்சியில் இருந்து கட்சித் தலைமை இன்னும் மீளவில்லை. மேலும் பலர் தவெக-வை நோக்கிச் செல்லக்கூடும் என்ற சந்தேகமும் நிலவி வருகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், மீண்டும் ஒரு தேர்தல் தோல்வியைச் சந்தித்தால் கட்சியில் மீண்டும் பிளவு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் அதிமுக தலைமை உள்ளது. இதனால், இந்த 5 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடாமல், தேர்தலைப் புறக்கணிக்கலாமா என்பது குறித்து அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
இவை தவிர, நாம் தமிழர் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவையும் இடைத்தேர்தலை எதிர்கொள்வது குறித்து தங்களது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளன. இதனால், தமிழக அரசியல் களத்தில் மிக விரைவில் இடைத்தேர்தல் களம் பெரும் பரபரப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.