இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே CA இறுதித்தேர்வு - இடைநிலைத் தேர்வு தேதியிலும் மாற்றம்!

 

பட்டயக் கணக்காளர் (CA) படிப்பின் இறுதிக்கட்டத் தேர்வுகளில் அதிரடியான மாற்றங்களை இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) மேற்கொண்டுள்ளது. மாணவர்களின் நலன் மற்றும் தேர்வுக்குத் தயாராகும் கால அவகாசத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சிஏ இறுதித்தேர்வுகள் ஜனவரி, மே மற்றும் செப்டம்பர் என ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், தேர்வுகள் அடுத்தடுத்து வருவதால் மாணவர்கள் முறையாகத் தயாராக முடிவதில்லை என்றும், இது மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, மே 2026 முதல் சிஏ இறுதித்தேர்வு மீண்டும் ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஆண்டுதோறும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் மட்டுமே சிஏ இறுதித் தேர்வுகள் நடைபெறும். ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடத்தப்பட்டு வந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. இறுதித்தேர்வில் மாற்றம் செய்யப்பட்டாலும், சிஏ முதல்நிலை மற்றும் இடைநிலை தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை. அவை வழக்கம்போல் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும்.

நடப்பாண்டு (2026) நடைபெறவுள்ள சிஏ இடைநிலைத் தேர்வு தேதியிலும் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதி தொடங்கவிருந்த இடைநிலைத் தேர்வுகள், தவிர்க்க முடியாத காரணங்களால் மே 5-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 1 தேர்வுகள் மே 5, 7 மற்றும் 9 ஆகிய தேதிகளிலும், குரூப் 2 தேர்வுகள் மே 11, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளிலும் நடைபெறும். தேர்வு நேரங்களில் எந்த மாற்றமும் இல்லை (மதியம் 2 மணி முதல் 5 மணி வரை). இந்த மாற்றங்கள் மாணவர்களுக்குத் தேர்வுக்குத் தயாராகப் போதுமான கால அவகாசத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.