அக்னி வீரர்களுக்கான சேவைக்காலம் 6 ஆண்டுகளாக நீட்டிப்பு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

 

அக்னிபத் திட்டத்தின்க கீழ் பணியாற்றும் 75% அக்னிவீரர்களுக்கு மேலும் 2 ஆண்டுகள் சேவைகால நீட்டிப்பு வழங்கிட மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 'ஸ்வச் பாரத் மிஷன் (கிராமின்)' திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை 2028 மார்ச் வரை நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றும் அக்னிவீரர்களின் எதிர்காலத்தைப் பலப்படுத்தும் விதமாக மிக முக்கிய முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளில் சேரும் வீரர்களின் ஒட்டுமொத்த சேவைக்காலத்தை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க மத்திய அமைச்சரவை அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.

முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட நான்கு ஆண்டு கால சேவை முடிவுக்குப் பிறகு, தகுதியும் விருப்பமும் உள்ள அனைத்து வீரர்களும் முறையான மற்றும் நிரந்தரப் பணியில் இணைவதற்கான நேரடி மற்றும் எளிய பாதையை இந்த நீட்டிப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நமது நாட்டின் பாதுகாப்புத் துறையை இளமையாகவும், தொழில்நுட்ப ரீதியில் மிகச் சிறந்த எதிர்காலத் தயார் நிலையுடனும் வைத்திருக்க எடுக்கப்பட்ட நீண்டகாலக் கட்டமைப்புச் சீர்திருத்தங்களின் தொடர்ச்சியே இந்த முடிவு என்று பாதுகாப்பு அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.