இன்று காலை மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம்... விசிக, முஸ்லிம் லீக் பிரதிநிதிகள் பதவியேற்பு!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை நேற்று முதற்கட்டமாக விரிவாக்கம் செய்யப்பட்டு, முதல்வர் உட்பட 33 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, கூட்டணியில் உள்ள பிற முக்கியக் கட்சிகளுக்கும் அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில், இன்று காலை மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
முன்னதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்குத் தலா ஒரு அமைச்சர் இடம் ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர் விஜய் முடிவெடுத்திருந்தார். அதன்படி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில் ஷாஜகான் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்னி அரசு ஆகியோர் புதிய அமைச்சர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் இன்று காலை 9.30 மணிக்குச் சென்னை ஆளுநர் மாளிகையான லோக் பவனில் நடைபெறும் அதிகாரப்பூர்வ விழாவில், தமிழக ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொள்ள உள்ளனர்.
இன்றைய புதிய அமைச்சர்களின் பதவியேற்பைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையின் ஒட்டுமொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை சட்டப்பூர்வ வரம்பான 35 ஐ முழுமையாக எட்டவுள்ளது.
தவெக அரசில் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விசிக மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய மூன்று கட்சிகளுக்கும் நேரடியாக ஆட்சியில் பங்கு வழங்கப்பட்டிருப்பது, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் ஆளுநர் மாளிகையில் விறுவிறுப்பாகத் தயாராகி வருகின்றன.