மத்திய அமைச்சரவைச் செயலாளர் டி.வி. சோமநாதனின் பதவிக்காலம் நீட்டிப்பு!

 

இந்திய நாட்டின் மிக உயரிய நிர்வாகப் பதவியான மத்திய அமைச்சரவைச் செயலாளராகப் பணியாற்றி வரும் டி.வி. சோமநாதன், ஐ.ஏ.எஸ்-ன் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதியுடன் இவரது தற்போதைய பதவிக்காலம் நிறைவடையும் நிலையில், அமைச்சரவையின் நியமனக் குழு இதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஒப்புதல் அளித்துள்ளது.

நாட்டின் மிக மூத்த குடிமைப் பணி அதிகாரியான இவர், 2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று மத்திய அமைச்சரவைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1987-ஆம் ஆண்டு பேட்சைச் சேர்ந்த தமிழ்நாடு பிரிவை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.

கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர். மத்திய நிதிச் செயலாளர் மற்றும் செலவினத் துறைச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இணைச் செயலாளர் மற்றும் கூடுதல் செயலாளராகச் செயல்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சென்னை மாநகராட்சி ஆணையர், வணிகவரித் துறை ஆணையர் மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் எனப் பல்வேறு முக்கிய உயர் பதவிகளை வகித்துள்ளார்.