புதிய சர்ச்சை...  பக்ரீத் பண்டிகைக்குப் பசு மற்றும் ஒட்டகம் பலியிடத் தடை?!

 

உலகெங்கும் வாழும் இஸ்லாமியப் பெருமக்களால் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வரவிருக்கும் மே 28 அன்று கொண்டாடப்பட உள்ளது. இந்தத் திருநாளில் உள்நாட்டு நுகர்வுக்காகவும் வழிபாட்டு மரபிற்காகவும் பசுக்கள், எருமைகள் மற்றும் ஒட்டகங்கள் உள்ளிட்ட விலங்குகளைச் சந்தைகளில் இருந்து வாங்குவதற்கும் விற்பதற்கும் ஒன்றிய அரசு கடுமையான தடைகளை விதித்துள்ளது. தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆளும் பல்வேறு மாநில அரசுகள் இந்தச் சட்டத்தைத் தீவிரமாக அமல்படுத்தத் தொடங்கியுள்ளதால் நாடு முழுவதும் புதிய விவாதம் எழுந்துள்ளது.

குறிப்பாகப் பக்ரீத் கொண்டாட்டங்களின் போது பாதுகாக்கப்பட்ட சில விலங்குகளைப் பலியிடுவதைத் தடை செய்தும், பொது இடங்களில் விலங்குகளை அறுப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்தும் மாநில அரசுகள் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளன. முதலில் மேற்கு வங்க அரசு கொண்டு வந்த இந்த நடைமுறையைத் தொடர்ந்து, தற்போதும் டெல்லி அரசும் இதனைத் தீவிரமாக அமல்படுத்தியுள்ளது. சாலைகள், தெருக்கள் மற்றும் திறந்தவெளிப் பொது இடங்களில் பலியிடுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதுடன், தடையை மீறினால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

இதற்கிடையே பசுவை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும், நாடு தழுவிய அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்றும் அஜ்மீர் ஷெரீப் மதகுரு சையத் சர்வர் சிஷ்டி ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார். இதேபோல் மேற்கு வங்க அரசு கொண்டு வந்த மாட்டிறைச்சிக் கட்டுப்பாட்டு உத்தரவை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளைக் கொல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பண்டிகைக் காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த அதிரடிச் சட்டக் கெடுபிடிகளால் இஸ்லாமியக் கூட்டமைப்பினர் சற்றே அதிருப்தி அடைந்துள்ளனர்.