இன்று மாலையுடன் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்பாளர்களின் தீவிர பிரச்சாரம் இன்று மாலையுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைகிறது. வரும் அக்டோபர் 6-ம் தேதி மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
பணப் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தைத் தடுத்து நிறுத்தத் தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுராந்தகத்தில் மட்டும் 9 பறக்கும் படை குழுக்களுடன், நிலை கண்காணிப்பு மற்றும் காணொளி கண்காணிப்புக் குழுக்களும் முழு வீச்சில் களமிறக்கப்பட்டுள்ளன.
இன்று மாலை பிரச்சாரம் நிறைவடைவதையொட்டி, தொகுதியைச் சேர்ந்த வாக்காளர்கள் அல்லாத வெளியாட்கள் அனைவரும் இன்று மாலை 6 மணிக்குள் உடனடியாக வெளியேற வேண்டும் எனத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், திருமண மண்டபங்கள், சமுதாயக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளியிடங்களைச் சேர்ந்தவர்கள் யாராவது தங்கிருக்கிறார்களா என்பது குறித்து அதிரடிச் சோதனைகளும் நடத்தப்படவுள்ளன.