கேரளம், அசாம், புதுச்சேரியில் பிரசாரம் ஓய்ந்தது... ஏப்.9-ல் வாக்குப்பதிவு.. மே 4ல் முடிவுகள்!
தமிழகத்தைப் போலவே அண்டை மாநிலமான கேரளம், வடகிழக்கு மாநிலமான அசாம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று மாலை பிரசாரம் ஓய்ந்ததைத் தொடர்ந்து, தொகுதிக்குச் சம்பந்தமில்லாத வெளிநபர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கப் போராடுகிறது. அவர்களுக்குச் சவால் விடும் வகையில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி தீவிரமாகக் களமிறங்கியுள்ளது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் சில முக்கியத் தொகுதிகளில் கடும் போட்டியை அளிக்கிறது. மொத்தம் 890 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இதில் 92 பேர் பெண்கள். 2.71 கோடி வாக்காளர்கள் இவர்களின் விதியைத் தீர்மானிக்க உள்ளனர்.
126 தொகுதிகளைக் கொண்ட அசாமில் 3-வது முறையாகத் தாமரை மலருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர்களின் பலத்துடன் ஆளும் பாஜக களம் காண்கிறது. இழந்த அதிகாரத்தை மீட்கக் காங்கிரஸ் இம்முறை மிகத்தீவிரமான வியூகங்களை வகுத்துள்ளது. 722 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். 2.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் இம்முறை போட்டி மிகக் கடுமையாக உள்ளது. ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறது. அவர்களுக்குப் போட்டியாகக் காங்கிரஸ் - திமுக கூட்டணி களம் காண்கிறது. இவர்களுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை முதல்முறையாகப் புதுச்சேரி தேர்தல் களத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முயல்வதால், வாக்குகள் பிரியும் சூழல் நிலவுகிறது. 294 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 9.48 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
பிரசாரம் ஓய்ந்ததைத் தொடர்ந்து, இனிமேல் அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் வாயிலாக வாக்குச் சேகரிப்பதையும் தேர்தல் ஆணையம் கண்காணித்து வருகிறது. வரும் 9-ஆம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை வரை நடைபெறும்.