மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது - நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்!

 

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை அக்டோபர் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடிகளில் நாளை காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி, மாலை 6 மணி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. தேர்தலை முன்னிட்டு நாளை இந்த இரண்டு தொகுதிகளுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பான முறையில் வாக்களிப்பதற்காக மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடி மையங்களும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தவெக, திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் களத்தில் இருப்பதால், இந்த இரண்டு தொகுதிகளிலும் 5 முனைப் போட்டி நிலவுகிறது.

மதுராந்தகம் (தனி) தொகுதியில் தவெக சார்பில் மரகதம் குமரவேல், திமுக சார்பில் பரந்தாமன், அதிமுக சார்பில் கணிதா சம்பத் உள்ளிட்ட 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தாராபுரம் (தனி) தொகுதியில் தவெக சார்பில் சத்தியபாமா, திமுக சார்பில் சுகன்யா, அதிமுக சார்பில் பானுமதி உள்ளிட்ட 22 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

தேர்தல் பரப்புரை நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் முழுமையாகத் தேர்தல் மற்றும் காவல் துறை அதிகாரிகளின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வந்தவர்கள் தங்கியுள்ளார்களா என்பதை அறியத் தங்கும் விடுதிகளில் சோதனைகள் நடத்தப்பட்டு வருவதுடன், டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்படுவதைத் தடுக்கப் பறக்கும் படைகள் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளன. நாளை நடைபெறும் இந்தத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.