ஆசி பெறுவது போல் காலில் விழுந்த பெண்! 78 வயது மூதாட்டியிடம் ரூ.19 லட்சம் நகைகள் கொள்ளை.. வைரல் வீடியோ
கனடாவில் 78 வயது இந்திய வம்சாவளி மூதாட்டியிடம் ஆசி பெறுவது போல் நடித்து சுமார் ரூ.19 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை பெண் ஒருவர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவை கனடா போலீசார் வெளியிட்ட நிலையில், அது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.கனடாவின் பிராம்ப்டன் பகுதியில் 78 வயது மூதாட்டி ஒருவர் நடைப்பயிற்சிக்காக சென்றுள்ளார். அப்போது சொகுசு காரில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அவரை அணுகியுள்ளார்.
78-YEAR-OLD BRAMPTON WOMAN FOOLED by THIEF who PRETENDS TO BEFRIEND HER
— RT (@RT_com) September 26, 2026
WOMAN TOUCHES HER FEET and HUGS VICTIM before MAKING THE SWITCH
FAKE JEWELLERY placed around her neck as REAL GOLD NECKLACE is STOLEN
$20,000 IN JEWELLERY TAKEN pic.twitter.com/giz5oapx4e
மூதாட்டியிடம் நெருக்கமாக பழகுவது போல் பேசிய அந்த பெண், பின்னர் ஆசி பெறுவது போல் அவரது காலில் விழுந்துள்ளார். தொடர்ந்து அவரை கட்டியணைத்துள்ளார்.அப்போது, பரிசு வழங்குவது போல் நகையை அணிவிப்பதாகக் கூறி மூதாட்டியின் கழுத்தில் இருந்த நகைகளையும் கைகளில் இருந்த வளையல்களையும் கையாண்டுள்ளார். ஆனால், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மூதாட்டி அணிந்திருந்த உண்மையான தங்க நெக்லஸ் மற்றும் வளையல்களை கழற்றி எடுத்துக்கொண்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் தனது நகைகள் திருடப்பட்டதை மூதாட்டி உணர்ந்துள்ளார். சுமார் 110 கிராம் எடையுள்ள தங்க நகைகளின் மதிப்பு ரூ.19 லட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூதாட்டியின் மகன் ராகவேந்திர குமார் இந்த சம்பவம் குறித்து சமூக வலைதளத்தில் தகவல் பகிர்ந்துள்ளார்.இந்த நகைகள் குடும்பத்துடன் மிகவும் நெருக்கமான நினைவுகளைக் கொண்டவை என்றும், அவரது தந்தை பொற்கொல்லராக இருந்ததால் அவரே நகைகளை வடிவமைத்து மனைவிக்கு பரிசாக வழங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை கனடா போலீசார் வெளியிட்டுள்ளனர். அதில், பெண் ஒருவர் மூதாட்டியின் காலில் விழுவது, அவரை கட்டியணைப்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பொதுமக்கள், குறிப்பாக வயதானவர்கள், அறிமுகம் இல்லாதவர்கள் திடீரென நெருக்கமாக வந்து நகைகளை தொடுவது அல்லது அணிவிப்பது போன்ற சூழ்நிலைகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இந்த சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.