இன்று முதல் 10-ம் வகுப்பு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம்; தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் தங்களின் விடைத்தாள் நகலைப் பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு குறித்த கூடுதல் விவரங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, விடைத்தாள் நகல் பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தங்களின் தேர்வு மையங்கள் வழியாகவும் இன்று மே 22 காலை 11 மணி முதல் விண்ணப்பிக்கலாம்.
இணைய வழி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வரும் மே 27 மாலை 5 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இடைப்பட்ட நாட்களில் வரும் மே 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால், அன்று ஒரு நாள் மட்டும் விண்ணப்பிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் கோரும் மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் விண்ணப்பக் கட்டணமாக தலா ரூ.275யைச் செலுத்த வேண்டும்.
மதிப்பெண்களில் ஏதேனும் சந்தேகம் உள்ள மாணவர்கள், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களின் விடைத்தாள்களைப் பெற்றுச் சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் பின்னரே, அவர்கள் மறுமதிப்பீடு அல்லது மறுமொத்தக் கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.