சென்னை விமான நிலையத்தில் ரூ.4 கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல் - பட்டதாரி வாலிபர் கைது!

 

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி சர்வதேச சந்தை மதிப்புடைய 4 கிலோவுக்கும் அதிகமான உயர்ரகக் கஞ்சாவைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் ஒருவரைச் சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மலேசியாவில் இருந்து வரும் விமானத்தில் பெருமளவில் போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாகச் சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சுங்கத்துறை அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தபோது, சுற்றுலா விசாவில் மலேசியா சென்று திரும்பிய 25 வயதுடைய வாலிபரின் நடவடிக்கைகளில் அதிகாரிகளுக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவரது உடமைகளை அதிகாரிகள் விரிவாகச் சோதனை செய்தனர். அவரது சூட்கேஸை திறந்து சோதனை செய்தபோது, துணிகளுக்கு இடையே 4 பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த பொட்டலங்களில் இருந்து 4 கிலோ 76 கிராம் எடையுள்ள உயர்தரப் பதப்படுத்தப்பட்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் ரூ.4 கோடி ஆகும். கைது செய்யப்பட்ட வாலிபரிடம் நடத்திய தொடர் விசாரணையில், அவர் ஒரு பட்டதாரி என்பதும், வேலைவாய்ப்பு இல்லாத நிலையில் விரைவாகப் பணம் சம்பாதிப்பதற்காகப் போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் கூலியாகச் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்துச் சுங்கத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து, இந்த போதைப்பொருள் கடத்தலுக்குப் பின்னணியில் உள்ள சர்வதேசக் கும்பல் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.