"இந்தியாவை வீழ்த்திக் கோப்பை வென்ற கேப்டன்!" - பாகிஸ்தான் வீரர் சர்ஃபராஸ் அகமது திடீர் ஓய்வு அறிவிப்பு!
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கேப்டன்களில் ஒருவரான சர்ஃபராஸ் அகமது, இன்று திடீரென தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்திற்கு விடைகொடுத்து ஓய்வை அறிவித்துள்ளார். சுமார் 20 ஆண்டு கால நீண்ட கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்யும் விதமாக அவர் தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலிருந்தும் (டெஸ்ட், ஒருநாள், டி20) ஓய்வு பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்ப்பாஸ் அகமது மொத்தம் 232 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 6,164 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 35 அரை சதங்கள் அடங்கும். விக்கெட் கீப்பராக 315 கேட்ச்கள் மற்றும் 56 ஸ்டம்பிங்களைச் செய்துள்ளார். அதே போன்று 54 டெஸ்ட் போட்டிகளிலும், 117 ஒருநாள் போட்டிகளிலும், 61 டி20 போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.
சர்ஃபராஸின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம், 2017-ல் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திக் கோப்பையை வென்றது தான்.
யு-19 உலகக்கோப்பை: 2006-ம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியிலும் இந்தியாவை வீழ்த்திப் பாகிஸ்தானுக்குக் கோப்பையைப் பெற்றுத் தந்துள்ளார். இதன் மூலம் ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே பாகிஸ்தான் கேப்டன் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இவரது தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி தொடர்ந்து 11 டி20 தொடர்களை வென்று, ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.