விநாயகர் சிலை கரைக்கச் சென்ற கார் விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி!

 

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டுத் திரும்பியவர்கள் பயணித்த கார் விபத்தில் சிக்கியதில், ஒரு பெண் உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஹைதராபாத் அருகே உள்ள பாலமாகுலா பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் அப்பகுதியில் நடைபெற்று வந்த கட்டுமானப் பணியில் இருந்த பாலத்தின் மீது வேகமாக வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியது.

விநாயகர் சிலை கரைப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த விபத்தில் சிக்கினர். பலத்த மோதல் காரணமாகக் காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.

கோர விபத்தில் சிக்கிய கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை கார் இழந்ததே இந்த கோர விபத்திற்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.