கார் பந்தயத்தால் விபரீதம்... நேருக்கு நேர் மோதிய சொகுசு கார்கள்!
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று நள்ளிரவு அதிவேகமாக வந்த இரண்டு சொகுசு கார்கள் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தங்களது விலையுயர்ந்த கார்களில் பந்தயத்தில் ஈடுபட்டபோது இந்த விபத்து நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. மோதிய வேகத்தில் இரண்டு கார்களின் முன்பகுதிகளும் முழுமையாக நொறுங்கிய நிலையில், அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த காற்றுப் பைகள் விரிந்ததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் கார்களை ஓட்டி வந்த இளைஞர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து நடந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த விபத்தால் அந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சாலையில் சிதறிக் கிடந்த வாகன பாகங்களை அகற்ற போலீசார் நீண்ட நேரம் போராடினர்.
விபத்து குறித்து தகவலறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர். மது போதையில் வாகனங்களை ஓட்டினார்களா அல்லது சட்டவிரோதமாக கார் பந்தயத்தில் ஈடுபட்டார்களா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய இளைஞர்கள் மீது கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது