பள்ளத்தில் பாய்ந்து தீப்பிடித்து எரிந்த கார்... 2 பேர் உடல் கருகி பலி, 3 பேர் படுகாயம்!
உத்தரகாண்ட் மாநிலம் பித்தோரகர் மாவட்டம் கனலிசனா பகுதியைச் சேர்ந்த 36 வயது பல்தேவ் குமார் என்பவர் அண்மையில் ஒரு புதிய சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடும் வகையில், பல்தேவ் குமார் தனது 35 வயது மனைவி நீது தேவி மற்றும் பிள்ளைகளான 8 வயது ஆத்வித், 5 வயது ஆரவ் ஆகியோருடன் ஹடல்வானி பகுதியில் இருந்து புதிய காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். திதிஹட் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர குமார் என்ற ஓட்டுநர் அந்த வாகனத்தை மலைப்பாதையில் கவனமாக இயக்கி வந்துள்ளார்.
இவர்களது வாகனம் மலைப்பாங்கான பண்டொலி பகுதியில் வந்து கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆழமான பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தின் கடுமையான தாக்கத்தால் காரில் பயணித்த பல்தேவ் குமாரின் மனைவி மற்றும் இரண்டு சிறு பிள்ளைகளும் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வாகனத்தை விட்டு வெளியேறினர். ஆனால் காரின் முன்பகுதியில் அமர்ந்திருந்த குடும்ப உரிமையாளர் பல்தேவ் குமார் மற்றும் ஓட்டுநர் ராஜேந்திர குமார் ஆகிய இருவராலும் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் வெளியே வர முடியாமல் போனது.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அந்த புதிய கார் திடீரெனப் பயங்கரமாகத் தீப்பற்றி எரியத் தொடங்கியதால் அந்த இடமே புகைமண்டலமாகக் காட்சியளித்தது. இந்த விபரீத தீ விபத்தில் காரின் உள்ளேயே மாட்டிக்கொண்ட பல்தேவ் குமார் மற்றும் ஓட்டுநர் ராஜேந்திர குமார் ஆகிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த உள்ளூர் போலிசார், காயமடைந்த தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.