அதிவேகமாக வந்த சொகுசு கார் மோதி கர்ப்பிணி பலி...  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் படுகாயம்  !

 

 

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டம் குஷிபுரா பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் பாலக் என்பவர், கடந்த ஆண்டு திருமணம் ஆன நிலையில் தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். ரக்‌ஷா பந்தனையொட்டி கடந்த திங்கட்கிழமை தனது பெற்றோர் வீட்டிற்கு வந்த அவர், குடும்ப உறுப்பினர்கள் 10 பேருடன் அப்பகுதியில் உள்ள ஓட்டலுக்கு உணவு சாப்பிடச் சென்றுள்ளார். ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே ஐஸ்கிரீம் வாங்கிக்கொண்டு சாலையோரம் நின்று அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அப்போது சாலையில் வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று கர்ப்பிணி பாலக் உள்பட குடும்ப உறுப்பினர்கள் மீதும் மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் பாலக் உள்பட 10 பேரும் படுகாயமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், கர்ப்பிணி பாலக் சிகிச்சை பலனின்றிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து விரைந்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், சொகுசு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஷிவம் என்ற இளைஞரைக்ை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ரக்‌ஷா பந்தன் பண்டிகைக் காலத்தில் கர்ப்பிணிப் பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.