தறிகெட்டு ஓடிய கார்.. ஓடையில் பாய்ந்து விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ரத்த வெள்ளத்தில் மீட்பு!

 

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே இன்று காலை நிகழ்ந்த கார் விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த மன்சூர் (48) என்பவர், தனது மனைவி வகிதாபானு, மகன் அஜ்மல், மைத்துனர் சாதிக் மற்றும் மாமியார் ஹாபிராமா ஆகியோருடன் காரில் பயணம் செய்துள்ளார். காரை மன்சூரின் மகன் அஜ்மல் ஓட்டிச் சென்றுள்ளார். கார் வாழப்பாடி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த பள்ளமான ஓடைக்குள் தலைகீழாகப் பாய்ந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி உருக்குலைந்தது. காரினுள் இருந்த 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி, பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடினர். விபத்து நடந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள், உடனடியாக போலீசாருக்கும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வாழப்பாடி போலீசார், பொதுமக்களின் உதவியுடன் காரின் கதவுகளை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த 5 பேரையும் மீட்டனர். பின்னர் அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காகச் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. "அதிவேகமாக வந்ததே கார் கட்டுப்பாட்டை இழக்கக் காரணம்" என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தேர்தல் முடிந்து மக்கள் ஊர் திரும்பும் வேளையில், நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் ஓட்டுநர்கள் கவனமுடன் இருக்குமாறு போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.