லாரி - கார் நேருக்கு நேர் மோதி கோரவிபத்து... 2 பேர் பலி; 3 பேர் கவலைக்கிடம்!
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே தாரமங்கலம் சாலையில், கார் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள தேத்திகிரிப்பட்டி பகுதியில் நேற்று கார் மற்றும் லாரி மோதிக்கொண்ட பயங்கர விபத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாவட்டம் குதிரைக்காரனூர் பகுதியைச் சேர்ந்த கே. செந்தில் (50) மற்றும் வி. நவீன் (23) உள்ளிட்ட 5 பேர், நேற்று ஒரு காரில் கோயிலுக்குச் சென்றுவிட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்களது கார் மேச்சேரி - தாரமங்கலம் சாலையில் தேத்திகிரிப்பட்டி என்ற இடத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது கார் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் முன்பகுதி முற்றிலுமாகச் சிதைந்து உருக்குலைந்தது.
இந்தக் கொடூர விபத்தில் காரில் பயணம் செய்த செந்தில் மற்றும் நவீன் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்து விரைந்து சென்ற மேச்சேரி போலீசார், பலியானவர்களின் உடல்களை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் காரில் இருந்த பரமசிவம் (55), அவரது மனைவி ராஜேஸ்வரி (50) மற்றும் அவர்களது உறவினர் சந்தானம் (40) ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
இவர்களுக்குச் சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.