பொள்ளாச்சி அருகே கார் மீது லாரி மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே இன்று மாலை நிகழ்ந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த லாரி கார் மீது மோதியதே இந்த விபத்திற்குக் காரணம் எனத் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் நெகமம் பகுதியைச் சேர்ந்த தனபால், தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தார். கார் நெகமம் சாலைப் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரி எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மிகப்பலமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் பயணித்த தனபால் (37), அவரது மனைவி மேனகா (35), மகள் கனிஷ்கா (17) மற்றும் உறவினர் சினேகா (23) ஆகிய நான்கு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் சிக்கி படுகாயமடைந்த சுர்ஜித் (12) என்ற சிறுவன், உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த நெகமம் போலீசார் விரைந்து வந்து, உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் சரவணன் என்பவரைப் போலீசார் உடனடியாகக் கைது செய்தனர்.
விசாரணை: அதிக வேகம் காரணமாக விபத்து ஏற்பட்டதா அல்லது ஓட்டுநர் உறக்கத்தில் இருந்தாரா என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய், மகள் மற்றும் உறவினர் என நான்கு பேர் பலியான சம்பவம் நெகமம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தில் சிதறிக் கிடந்த பொருட்களும், நொறுங்கிய காரும் அந்த விபத்தின் கோரத்தை பறைசாற்றின.