கார்- லாரி மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழப்பு!

 

தெலங்கானா மாநிலம் சம்ஷாபாத் வெளிவட்டச் சாலை அருகே இன்று அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்ஷாபாத் வெளிவட்டச் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் எதிர்பாராத விதமாகப் பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் ஒரு பெண் மற்றும் இரண்டு பச்சிளம் குழந்தைகளும் அடங்குவர். காரில் இருந்த மற்றொரு பெண் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய நிலையில் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அதிகாலை நேரத்தில் கார் ஓட்டுநர் தூக்கத்தில் கண் அயர்ந்ததே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கின்றனர். அதிவேகமும் ஒரு முக்கியக் காரணியாகப் பார்க்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வெளிவட்டச் சாலையில் அடுத்தடுத்து நிகழும் விபத்துகள் வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.