தூத்துக்குடியில் கார் - லாரி மோதி கோர விபத்து.. 4 பேர் பலி!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேர்ந்த கோர விபத்தில், சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச் சென்று தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இன்று அதிகாலை தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் (எம்.கோட்டூர்) அருகே கார் வந்துகொண்டிருந்தது. அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின்புறத்தில் கார் எதிர்பாராதவிதமாக அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நசுங்கியது. காரில் பயணித்த 6 பேரில், பாஸ்கரன், வனிதா, பழனி, வசந்தி ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த எட்டயபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டனர். விபத்தில் படுகாயமடைந்த மற்ற இருவர் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட உறக்கம் காரணமாக இந்த விபத்து நடந்திருக்கலாம் எனப் போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து எட்டயபுரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனைத் தரிசித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய நிலையில், சென்னை கொளத்தூர் குடும்பத்தினர் விபத்தில் சிக்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.