அதிர்ச்சி... 60 கி.மீ பயணத்திற்கு ரூ. 5,662 கட்டணம் வசூலித்த தனியார் கார் நிறுவனம்!

 

டெல்லியில் 60 கி.மீ பயணம் செய்ய கட்டணமாகத் தனியார் கார் நிறுவனம் ரூ. 5,662 வசூலித்த சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. டெல்லியின் மஹிபால்பூரில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த குடும்பத்தினர், யஷோபூமியில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்துகொள்ள 'ஓலா'  கார் நிறுவனத்தில் வண்டியை முன்பதிவு செய்திருந்தனர்.

சுமார் 60 கி.மீ பயணம் செய்த அவர்கள், கண்காட்சியில் நேரத்தைச் செலவிட்டு பின்னர் அங்கிருந்து நேரடியாக விமான நிலையத்தை அடைந்தனர். ஆனால் பயணம் முடிந்தபிறகு, ஓலா செயலியில் கூடுதலாக 240.5 கி.மீ பயணித்ததாகக் காட்டி சுங்கக்கட்டணம் உள்பட மொத்தக் கட்டணம் ரூ. 5,662 என வந்த ரசீதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

நாங்கள் 6 மணி நேரத்திற்கு 60 கி.மீ பயணத் திட்டத்திற்கு ரூ. 1,285 மட்டுமே கட்டணமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பில் நான்கு மடங்காக உயர்த்தப்பட்டது எப்படி என்று புரியாமல் தவிப்பதாகக் கூறியுள்ளனர். வார இறுதி நாள் என்பதால் கார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், அவர்கள் சமூக ஊடகங்கள் மூலம் தங்களது புகாரைப் பதிவிட்டுள்ளனர்.