மரத்தில் கார் மோதி விபத்து... 2 கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பலி!
கர்நாடக மாநிலம் ராமநகரா மாவட்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் பெங்களூரைச் சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு மாணவர்களும் நான்கு மாணவிகளும் என மொத்தம் ஆறு பேர் ஒரு காரில் பெங்களூரிலிருந்து குனிகல் பகுதியில் நடைபெறும் 'ஆக்டிவிட்டி கிளாஸ்' ஒன்றில் பங்கேற்பதற்காகப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கர்நாடகா மாநிலம், ராமநகரா மாவட்டம், மகதி தாலுகாவில் உள்ள குடேமரனஹள்ளி ஹேண்ட் போஸ்ட் அருகே கார் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோrம் நின்றுகொண்டிருந்த பெரிய மரத்தின் மீது பயங்கரமாக மோதியுள்ளது.
இக்கொடூர விபத்தில் காரில் பயணம் செய்த கனவி மற்றும் வைஷ்ணவி ஆகிய இரண்டு மாணவிகளும் உடல் நசுங்கிச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த மற்ற நான்கு பேரும் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையிலும், மற்ற இருவர் நெலமங்களாவில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த நான்கு பேரின் உடல்நிலையும் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநர் தூக்கக் கலக்கத்தில் வாகனம் இயக்கியிருந்தாலோ அல்லது காரை அதிக வேளத்தில் ஓட்டியிருந்தாலோ இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த மாணவிகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நெலமங்களா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்துக் குடூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.