கவர்னர் மாளிகை சுற்றுச்சுவர் மீது கார் மோதி விபத்து; 5 பேர் காயம்!

 

சென்னையில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து ஆளுநர் மாளிகையின் சுற்றுச்சுவரில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிண்டி ஆளுநர் மாளிகை அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்தது. சாலைத் தடுப்புகளைத் தாண்டிப் பாய்ந்த அந்தக் கார், ஆளுநர் மாளிகையின் பாதுகாப்புச் சுவரில் பலமாக மோதியது. இந்த பயங்கர மோதலில் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து சேதமடைந்தது.

காரில் பயணித்த 5 நபர்களும் அதிர்ஷ்டவசமாகக் குறைந்த காயங்களுடன் உயிர் தப்பினர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான காரைக் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஓட்டுநரின் கவனக்குறைவு அல்லது அதிக வேகம் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.