திருப்பூரில் லாரி மீது கார் மோதி கோர விபத்து... காவலர் உட்பட 6 பேர் பலி!
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே லாரி மீது கார் மோதியதில் காவலர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குறுக்குத்தி காவல் சோதனைச் சாவடி அருகே சாலை மையத் தடுப்பில் மோதி நின்ற லாரியை அப்புறப்படுத்தும் பணி நேற்று நள்ளிரவு நடைபெற்றது. அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், எதிர்பாராத விதமாக லாரி மீது மோதியதில் இந்தக் கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்து நடந்த தருணத்தில் லாரியை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ரவிச்சந்திரன் மற்றும் லாரி ஓட்டுநர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், காரில் பயணம் செய்தவர்கள் என மொத்தம் 6 பேர் இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் மற்றும் பொதுமக்கள் பலியான சம்பவம் குறித்து, விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.