பெற்ற தாயை கார் ஏற்றி கொடூரமாகக் கொன்ற மகள் ... அதிர்ச்சி !
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் பிரதாப் நகர் பகுதியில் உள்ள ரவீந்திரா நகரில் வசித்து வருபவர் 45 வயது நீரஜ் சர்மா, கடந்த 3 ம் தேதி தன் மகள் ஆயுஷி சர்மாவைப் பயிற்சி மையத்தில் விட்டு விட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்தச் சாலையில் அதிவேகமாக வந்த ஒரு சொகுசு கார் நீரஜ் சர்மா மீது பயங்கரமாக மோதியதில், அவர் காற்றில் 100 அடி உயரத்திற்குத் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய காரின் ஓட்டுநர் உடனடியாக அங்கிருந்து தப்பியோடிய நிலையில், நீரஜ் சர்மாவின் சகோதரர் ராகேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விபத்து நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்த காவல் துறையினரின் விரிவான விசாரணையில், இக்கொலையின் பின்னணியில் இருந்த பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகி உள்ளன. நீரஜ் சர்மாவின் கணவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரது மறைவுக்குப் பிறகு அரசாங்கத்தின் கருணை அடிப்படையில் கணவரின் அரசு வேலை மனைவி நீரஜ் சர்மாவுக்கு முறைப்படி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தனது தந்தையின் அரசு வேலை தனக்குத்தான் கிடைக்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்த மகள் ஆயுஷி சர்மாவுக்குத் தனது தாய்க்கு அந்த வேலை சென்றது ஆரம்பம் முதலே பிடிக்கவில்லை.
அரசு வேலை மட்டுமின்றித் தங்களின் குடும்பச் சொத்துகளை முழுமையாகக் கைப்பற்றுவதிலும் இந்த அம்மா மற்றும் மகள் ஆகிய இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கடுமையான குடும்பப் பிரச்னைகள் இருந்து வந்துள்ளது. இதனால் தாயின் மீது மிகுந்த ஆத்திரத்தில் இருந்த மகள் ஆயுஷி சர்மா, எப்படியாவது பெற்ற தாயைக் கொலை செய்ய முடிவு செய்து அதற்காகக் கடந்த 3 மாதங்களாக ரகசியமாகத் திட்டம் தீட்டியுள்ளார். சொத்து மற்றும் அரசு வேலை ஆசையினால் பெற்ற மகளே கார் ஏற்றித் தாயைக் கொடூரமாகக் கொலை செய்த இந்தச் சம்பவம் ஜெய்ப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.