40 அடி ஆழக் கிணற்றில் பாய்ந்த கார்... மரணப் பிடியில் சிக்கிய குடும்பம்... பகீர் வீடியோ!
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்தில் கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து திடீரென 40 அடி ஆழமுள்ள கிணற்றில் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தபோது நிலைதடுமாறிய வாகனம், சாலையோரம் இருந்த கிணற்றுக்குள் தலைகுப்புற விழுந்தது. கிணற்றில் சுமார் 15 அடி அளவிற்குத் தண்ணீர் இருந்ததால், கார் உள்ளே விழுந்த வேகத்தில் பெரும் சத்தம் எழுந்தது. காரில் இருந்தவர்கள் உயிருக்குப் பயந்து அலறிய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது கார் கிணற்றுக்குள் மிதந்து கொண்டிருந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிரேன் இயந்திரம் மூலம் கிணற்றுக்குள் கிடந்த காரை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு வெளியே எடுத்தனர். அதிவேகமாக கார் சென்றதே இந்த விபத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக கிணற்றில் தண்ணீர் இருந்ததால் ஒரு குடும்பமே மொத்தமாக உயிர் பிழைத்ததை மக்கள் ஆச்சரியத்துடன் பேசி வருகின்றனர். ஓட்டுநர்கள் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும் எனப் போக்குவரத்துத் துறையினர் மீண்டும் ஒருமுறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.