கிணற்றுக்குள் பாய்ந்த கார்... 6 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் பலி!

 

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் திண்டோரி (Dindori) பகுதியில், பாதுகாப்பற்ற நிலையில் இருந்த கிணறு ஒன்று 9 உயிர்களைப் பலிவாங்கியுள்ளது. உயிரிழந்தவர்களில் 6 பேர் சிறுவர், சிறுமியர் என்பது அந்த கிராமத்தையே கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது.

திண்டோரி தாலுகா இந்தூர் கிராமத்தைச் சேர்ந்த சுனில் தத்து தர்கோடு என்பவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அங்குள்ள ஒரு பயிற்சி மையத்தின் சார்பில் நடத்தப்பட்ட விழாவில் கலந்து கொண்டுவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

நேற்று இரவு சுமார் 10:30 மணியளவில், அவர்களது 'எர்டிகா' கார் சிவாஜி நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தது. அந்தப் பகுதியில் உள்ள சிமெண்ட் சாலையின் முடிவில், போதிய பாதுகாப்புச் சுவர் இல்லாத கிணறு ஒன்று இருந்துள்ளது. இரவு நேரம் என்பதால் ஓட்டுநரால் கிணற்றைக் கவனிக்க முடியவில்லை. நேராகச் சென்ற கார், சுமார் 25 அடி ஆழமுள்ள தண்ணீரில் தத்தளித்த கிணற்றுக்குள் பாய்ந்தது.

இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் நீச்சல் வீரர்கள், இரண்டு கிரேன் இயந்திரங்களின் உதவியுடன் நள்ளிரவு 12:15 மணியளவில் காரை வெளியே எடுத்தனர். ஆனால், காரிலிருந்த 9 பேரும் ஏற்கனவே மூச்சுத்திணறி உயிரிழந்திருந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சுனில் தத்து தர்கோடு (32) - ஓட்டுநர், ரேஷ்மா (27) - சுனிலின் மனைவி, ஆஷா அனில் தர்கோடு (32), குன்வந்தி (11), ஸ்ரேயாஸ் (11), ஷ்ரவணி (11), ஸ்ருஷ்டி (14), சம்ருதி (7), ஸ்ரத்தா (13) ஆகிய 9 பேர் இந்த விபத்தில் பலியாகி உள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் பொது இடங்களில் உள்ள திறந்தவெளி கிணறுகளை ஆய்வு செய்து, பாதுகாப்புச் சுவர்கள் இல்லாத கிணறுகளை உடனடியாக மூடவோ அல்லது வேலி அமைக்கவோ உத்தரவிடப்பட்டுள்ளது. கிணற்றுக்கு முறையான பாதுகாப்புச் சுவர் அமைக்காத உரிமையாளர் ராஜேந்திர ராஜே மற்றும் கவனக்குறைவாகக் காரை ஓட்டிய ஓட்டுநர் (உயிரிழந்தவர்) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தூர் கிராமத்தில் இன்று ஒரே நேரத்தில் 9 சிதைகள் எரியூட்டப்பட்டக் காட்சி பார்ப்பவர்களின் நெஞ்சைப் பிழிவதாக இருந்தது.