காருக்குள் சிக்கி 3 வயது சிறுவன் பலி... கரூரில் நெஞ்சை உலுக்கும் துயரம்!

 

கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள கழுகூர் ஈஸ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்த ஆண்டிவேல் என்பவரது 3 வயது மகன் சஞ்சீவ், நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது தற்செயலாக அங்கு நின்ற காருக்குள் சென்ற சிறுவன், கதவைச் சாத்தியபோது அது தானாகவே லாக் ஆகியுள்ளது. நீண்ட நேரமாகியும் வெளியே வர முடியாமல் காருக்குள்ளேயே சிக்கிய சிறுவன், போதிய காற்றோட்டம் இன்றி மூச்சுத்திணறி மயங்கி விழுந்துள்ளான்.

விளையாடிக்கொண்டிருந்த மகனை நீண்ட நேரமாகக் காணாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் சந்தேகத்தின் பேரில் காரைத் திறந்து பார்த்துள்ளனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த சிறுவனை மீட்டு உடனடியாகத் தோகைமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். ஆனால், அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்ததைக் கேட்டுப் பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

இந்தத் துயரச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம், சிறுவனின் உடலைக் கைப்பற்றிக் குளித்தலை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இது தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விளையாடச் சென்ற இடத்தில் காருக்குள் சிக்கி 3 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் ஈடு செய்ய முடியாத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.