4 வழிச்சாலையில் பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பெரும் பரபரப்பு!
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நான்கு வழிச்சாலையில் மேம்பாலப் பணிக்காகத் தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காரில் இருந்த 4 பேரும் காயங்களின்றித் தப்பினர். கரூர் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேடசந்தூர் அருகே உள்ள காக்காதோப்பு பிரிவு பகுதியில் தற்போது புதிய மேம்பாலங்கள் கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காகச் சாலையின் ஒரு பகுதியில் ஆழமான பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்ததுடன் உரிய எச்சரிக்கைப் பலகைகள் எதுவும் முறையாக அமைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இன்று அந்த வழியாக வந்து கொண்டிருந்த கார் ஒன்று மேம்பாலப் பணிக்காகத் தோண்டப்பட்ட அந்தப் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த சத்தம் கேட்டு உடனடியாக ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும் அப்பகுதி வாகன ஓட்டிகளும் இணைந்து பள்ளத்தில் கவிழ்ந்த காரில் இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டனர். காரின் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 4 பேரும் எவ்விதப் பெரிய காயங்களுமின்றிப் பெரும் அதிர்ஷ்டவசமாகக் காப்பாற்றப்பட்டது அப்பகுதியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காக்காதோப்பு பிரிவு பகுதி அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதியாக மாறி வருவதாகத் தெரிவிக்கும் வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலைத் துறையைக் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களில் போதிய பாதுகாப்புத் தடுப்புகளையும் ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளையும் அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த வேடசந்தூர் காவல்துறையினர் உடனடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.